பிரமிக்க வைத்த வள்ளல் ஹபீப்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் விடுதலைப் போராட்டத்தில் கிழக்காசியாவில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் பெரும் பங்கு கொண்டனர். மியான்மரில் (அன்றைய பர்மா) ஹபீப் பெரும் வணிகராகத் திகழ்ந்தவர்.
பெரும் கோடீஸ்வரர். நேதாஜி, மியான்மர் சென்ற போது அவர் தம் சொத்துக்கள் அனைத்தையும் இந்திய நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணம் செய்தார். அதைக் கண்டு நேதாஜி பிரமித்து விட்டார். இதன் பின் கிழக்காசியாவில் நேதாஜி பயணம் செய்த இடங்களிலெல்லாம் ஹபீபின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். 'நாட்டைப் பிடித்திருக்கும் பிணி நீங்க ஹபீப் மருந்து தேவை' என்று அவர் பேசிய கூட்டங்களில் எல்லாம் சொல்லலானார்.
ஹபீபுர் ரஹ்மான், ஷாநவாஸ் கான், கரீம் கனி, மௌலானா கலீலுர்ரஹ்மான், முஹ்யித்தீன் பிச்சை ஆகிய இந்திய முஸ்லிம்கள் நேத்தாஜியின் உதவியாளர்களாக இருந்து அரும்பணியாற்றினார்கள்.
சிங்கை சிங்கம்
1914-ம் ஆண்டில் சூரத்தில் பிறந்து, சிங்கப்பூரில் வாழ்ந்த காசிம் இஸ்மாயில் மன்சூர் பெரும் வணிகர், கோடீஸ்வரர். 1915ஆம் ஆண்டு ரங்கூனில் முகாமிட்டிருந்த இந்தியப்படையினர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் புரட்சியில் கலந்து கொள்வதென முடிவு செய்தனர்.
இந்தப் படை அணியினருக்குத் தேவையான ஆயுதங்களை வழங்கி ஊக்குவிக்க முன்வந்தார் காசிம் இஸ்மாயில் மன்சூர். இந்திய விடுதலைக்காகப் புரட்சியாளர்கள் நடத்தும் கிளர்ச்சியில் கலந்து கொள்ள சிங்கப்பூரிலிருந்து ஆட்களை ரங்கூனுக்கு அனுப்ப அவர் ஏற்பாடு செய்தார். இத்தகவல் பிரிட்டிஷ் உளவுத் துறைக்குத் தெரிந்து விட்டது. உடனே இவர் கைது செய்யப்பட்டார். இவர் மீதான குற்றச்சாட்டை இராணுவ நீதிமன்றம் விசாரித்து, இவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. 1915ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவர் சிங்கப்பூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார்.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராக வெளிநாடுகளில் இருந்த இந்திய இராணுவ முகாம்களில் புரட்சி நடத்தத் திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தின்படி, சிங்கப்பூரில் முகாமிட்டிருந்த இந்தியக் காலாட்படை அணியினர் புரட்சியில் ஈடுபட்டனர். இராணுவச் சட்டத்தை அமல்படுத்தி இவர்களது புரட்சியை ஒடுக்கினர் ஆங்கிலேயர். புரட்சி பற்றி அவர்கள் விசாரணை நடத்தி ரசூலுல்லா, இம்தியாஸ் அலி, ரக்னுத்தீன் ஆகிய மூவருமே இப்புரட்சிக்குக் காரணம் என்று கண்டு பிடித்தனர். இராணுவ நீதிமன்றம் இந்த மூவரையும் பலரது முன்னிலையில் சுட்டுக் கொல்லும் படி உத்தரவிட்டது. அதன்படி இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
புரட்சியில் ஈடுபட்ட காலாட்படை அணிக்குத் தலைமை வகித்த சுபேதார் தண்டுகான், ஜமேதார் கிஸ்டிகான் ஆகியோருக்கு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. 1915ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 அன்று இவர்கள் சிங்கப்பூர் சிறைச்சாலை வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இப்படி இந்திய விடுதலைக்காக முஸ்லிம்கள் செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நமது உயிராலும், பொருளாலும் எண்ணற்ற தியாகங்கள் செய்து இந்திய நாடு சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்துள்ளோம்.
இந்திய நாடு எங்கள் நாடு, என்றும் நாங்கள் அந்நியரல்ல என்பதை நமது சகோதர சமுதாயத்தினரிடம் எடுத்துச் சொல்வோம். நமது முன்னோர்கள் செய்த தியாகத்தை மறைத்து, இந்த நாட்டிலிருந்து நம்மை அந்நியப்படுத்த நினைக்கும் தீய சக்திகளை அடையாளம் காட்டுவோம்.
No comments:
Post a Comment