புதைந்து போன புரட்சி மலர்கள்
வட இந்தியாவில் நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது ஹியூவீலர் என்னும் ஆங்கிலேய அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். இப்புரட்சியில் கலந்து கொண்ட ஜாபர் அலி என்பவர் தான் அவரைச் சுட்டுக் கொன்றார் என்ற தவறான தவகல் ஆங்கிலேய அதிகாரிகளுக்குத் தரப்பட்டது. ஜாபர் அலி கைது செய்யப்பட்டார். அவரை ஒரு தூணில் கட்டி வைத்து, சாட்டையால் அடித்தனர். அவரது உடலிலிருந்து கசிந்த இரத்தம் கீழே விரிக்கப்பட்டிருந்த ஈரப்பாயில் சிந்தி உறையாமல் ஈரமாக இருந்தது. பாயில் சிந்திய இரத்தத்தை நாவினால் சுத்தப்படுத்தும் படி ஜாபர் அலியை சித்ரவதை செய்தனர். பாயை சுத்தம் செய்த போதும் சாட்டையால் அவரை அடித்தனர். இறுதியில் ஜாபர் அலி ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்.
1857ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது டிட்டு மிர் மியான் என்று அழைக்கப்பட்ட மிர் நிசார் அலி வஹாபிகளை ஒன்று திரட்டிக் கிளர்ச்சியில் ஈடுபடுத்தினார். கொல்கத்தா அருகே பல கிராமங்களை ஆங்கிலேயரின் அதிக்கத்திலிருந்து விடுவித்தார். பிரிட்டிஷ் தளபதி அலெக்சாண்டர் தலைமையில் இராணுவம் வந்து கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் தொடுத்தது. இதில் 400 வஹாபியர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சியின் முன்னணியில் இருந்த ரசூல் என்பவர் தூக்கிலிடப்பட்டார்.
அன்றும் ஒரு பொடோ
இந்திய மக்களை ஒடுக்குவதற்காக ஆங்கிலேயர்கள் பல அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்தனர். அவற்றுள் மிகக் கொடுமையானது 'ரௌலட் சட்டம்'. இந்தச் சட்டத்திற்கு எதிராக இந்தியாவெங்கும் பெரும் கிளர்ச்சி மூண்டது.
பஞ்சாபில் இக்கிளர்ச்சி மிகத் தீவிரமாக நடைபெறக் காரணமாக இருந்தவர் டாக்டர் சைபுதீன் கிச்சுலு. இவரைப் பிரிட்டிஷ் இராணுவம் அமிர்தஸரசிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த தர்மசாலா என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றது. இதனை அறிந்த மக்கள் கொதிப்படைந்தனர். போலீஸ் ஆணையர் அலுவலகத்திற்கு அவர்கள் பெருந்திரளாகச் சென்றனர். அந்த மக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து சேதம் விளைவித்தனர். இதில் ராபின்சன், சார்ஜண்ட் ரௌலண்ட் என்னும் இரு ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர்.
அப்போது மக்களை அமைதிப்படுத்திக் கொண்டிருந்த மக்பூல் மாமூத் என்னும் வழக்கறிஞரைப் போலீசார் கைது செய்தனர். ராபின்சன், ரௌலண்ட் ஆகியோரைக் கொன்றவர்கள் யார் என்று கூறும் படி அவரைச் சித்ரவதை செய்தனர். 'கொலையாளிகளை என்னால் அடையாளம் காட்ட முடியாது' என்று அவர் எழுதிக் கொடுத்தார். உடனே போலீசாரே சில பெயர்களை எழுதி, அவர்கள் குற்றவாளிகள் என்று வாக்குமூலம் தருமாறு அவரை வற்புறுத்தினர். 'எனக்கு மனசாட்சி உண்டு, பொய் சொல்ல மாட்டேன்' என்று அவர் உறுதியாகக் கூறிவிட்டார். மனசாட்சியுடன் நடந்து கொண்ட அவரது வக்கீல் சான்றிதழ் பறிக்கப்பட்டது.
இந்தக் கலவரத்தின் போது ஈஸ்டன் என்னும் ஆங்கிலப் பெண்மணியைத் தாக்க முயன்றதாக முஹம்மது அக்ரம் என்பவர் கைது செய்யப்பட்டார். உண்மையில் அவர் ஈஸ்டனைத் தாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. ஆனால் விசாரணையில் அவர் குற்றவாளி என்று கூறி மரண தண்டனை விதிக்கப்பட்டது.
சட்டத்தை மீறி தண்டியில் உப்பு அள்ளிய காந்தியடிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மகாராஷ்டிர மாநிலத்தில் வெற்றிகரமாக பொது வேலைநிறுத்தம் நடத்தியவர் அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன். அப்போது அந்த மாநிலத்தில் பல இடங்களில் கலவரங்கள் நடந்தன. இக்கலவரங்களைத் தூண்டிவிட்டதாக அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன் மீது வழக்குத் தொடரப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1931ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதியன்று ஏர்வாடா சிறையில் அவர் தூக்கிலிடப்பட்டார்.
ககோரி ரயில் கொள்ளை வழக்கில் புரட்சி வீரர் அஷ்பாகுல்லாஹ் கான் மீது விசாரணை நடைபெற்றது. 'நீ முஸ்லிம். மற்ற புரட்சிக்காரர்கள் இந்துக்கள். அவர்களைக் காட்டிக் கொடுத்தால் உனக்கு நிபந்தனையற்ற விடுதலை கிடைக்கும். ஏராளமான பணமும் தரப்படும்' என்றெல்லாம் கூறி வெள்ளை அதிகாரிகள் ஆசை காட்டினார்கள். இந்த ஆசை வார்த்தைகளையெல்லாம் கேட்ட அஷ்பகுல்லாஹ் கான் பாறைபோல் அசையாமல் நின்றார். தங்கள் பிரித்தாளும் சூழ்ச்சி பலிக்காமல் போகவே பிரிட்டிஷார் இவருக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தனர். அவர் தூக்கில் ஏற்றப்பட்ட நாளன்று திருக்குர்ஆனைக் கழுத்திலே தொங்கப் போட்டார். ஹாஜிகளைப் போன்று 'லப்பைக் லப்பைக்' என்று கூறிக் கொண்டிருந்தார். தாமே சுருக்குக் கயிற்றை எடுத்துக் கழுத்திலே மாட்டிக் கொண்டார். அஷ்பகுல்லாஹ் கான் உ.பி.யில் உள்ள ஷாஜஹான்பூரில் பிறந்தவர்.
முஹம்மதலி, ஷௌகத் அலி, அபுல்கலாம் ஆஸாத் ஆகியோர் காந்தியடிகளின் ஆதரவுடன் துவக்கிய கிலாஃபத் இயக்கத்திற்குத் தமிழக முஸ்லிம்கள் பேராதரவு அளித்தனர். காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் இந்த இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றினார். ஆங்கில ஆட்சியை எதிர்த்து மாணவர்கள் கல்லூரிகளையும் படிப்பையும் துறக்க வேண்டும் என்ற காந்தியடிகளின் வேண்டுகோளை ஏற்று பி.ஏ படிப்பை இடையில் நிறுத்தினார். பின்னர் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். கதர் மீது மிகுந்த அபிமானம் கொண்ட இவர் தனது திருமணத்தின் போது கரடுமுரடான கதர் ஆடை தான் அணிந்திருந்தார்.
விடுதலைப் போரில் ஈடுபடுவதற்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலையை உதறி எறிந்தவர். கம்பம் பீர்முஹம்மது பாவலர். இவர் கதர் இயக்கத்தின் தீவிரத் தொண்டராகத் திகழ்ந்தவர். விடுதலை உணர்வைத் தூண்டும் நாடகத்தில் நடித்ததற்காக இவர் கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பொதுக்கூட்டங்களில் பேச ஆங்கிலேய அரசு இவருக்குத் தடை விதித்தது. அதனால் இவர் வாயைத் துணியால் கட்டிக் கொண்டு மேடையேறி சைகைகளின் மூலம் பேசி வரலாறு படைத்தவர்.
சிலையை உடைத்த சீலர்
தமிழ்நாட்டில் கதர் இயக்கத்திற்கு அருந்தொண்டு புரிந்தவர்களில் காஜா மியான் ராவுத்தர், 'மேடை முதலாளி' என்று அன்புடன் அழைக்கப்பட்ட மு.ந.அப்துர்ரஹ்மான் சாகிப், ஆத்தூர் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இலவசமாகக் கதராடை வழங்கியவர் காஜா மியான் ராவுத்தர். பெருமளவில் கதர்த்துணி உற்பத்தி செய்வதற்காக கதர் ஆலை ஒன்றையே அவர் நிறுவினார். 'மேடை முதலாளி' அப்துர்ரஹ்மான் சாகிப் மக்களிடையே கதர் பிரச்சாரம் செய்தார். மக்களுக்கு இலவசமாகக் கதராடை வழங்கினார். கதர்த் துணி தயாரிக்க இவர் தனது வீட்டிலேயே தறி அமைத்தார். பல வீடுகளுக்குச் சென்று கதர் ராட்டினம் கொடுத்து, கதர் நூற்கக் கற்றுக் கொடுத்தார்.
கதர் அணியாத முஸ்லிம் மணமக்களின் திருமணங்களில் கலந்து கொள்வதில்லை என்று அறிவித்தவர் அல்லாமா அப்துல் ஹமீத் பாகவி. இவர் தீவிர கதர் பக்தராகத் திகழ்ந்தவர். இவர் பல ஊர்களுக்குச் சென்று மேடையேறி விடுதலைப் போர் முரசு முழங்கினார்.
ஆங்கிலேய அரசின் இராணுவத் தளபதியாக இருந்த நீல் எனப்படும் நீசன் மிகுந்த கொடூரக்காரன். சிப்பாய்க் கலகத்தின் போது கண்ணில் பட்ட இந்தியர்களைச் சுட்டுக் கொன்றவன். இவனுக்குச் சென்னையில் சிலை வைக்கப்பட்டிருந்தது. அச்சிலையைத் தகர்க்கும் போராட்டம் 1927ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இராமநாதபுரம் முஹம்மது சாலியா சிலையை சம்மட்டியால் அடித்து உடைத்தார். இவருக்கு முன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த அப்துல் மஜீது, லத்தீப், இராமநாதபுரம் மஸ்தான், பண்ருட்டி முஹம்மது உசேன் முதலியவர்கள் சிலை உடைப்புப் போரில் பங்கு கொண்டு 6 மாதம் முதல் 2 வருடம் வரை கடுங்காவல் தண்டனை பெற்றனர்.
No comments:
Post a Comment