News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Thursday, December 4, 2014

இந்திய சுதந்திரப் போரில் இஸ்லாமியர்கள் பங்கு - பகுதி 3

தீரன் திப்பு சுல்தான்
'மைசூர் புலி' திப்பு சுல்தானின் பெயரைக் கேட்டாலே ஆங்கிலேயரின் உடல்கள் நடுங்கும். இவர் ஹைதர் அலியின் மகனாவார். இரண்டாம் மைசூர் போரில் இவரது பங்கு மகத்தானது. தன் தந்தையின் மறைவிற்குப் பின், ஆங்கிலேயரை எதிர்த்து இவர் போரில் ஈடுபட்டார்.
1790ஆம் ஆண்டு முதல் 1792ஆம் ஆண்டு வரை நடைபெற்ற மூன்றாம் மைசூர் போரில் திப்பு தோல்வியடைந்தார். தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் கூறிய போது, திப்பு சுல்தான் 'முடியாது' என்று மறுப்புத் தெரிவித்தார். மதிப்பிற்குரிய இந்த வீரருக்கு ஒருவன் துரோகம் செய்தான்.  அதன் காரணமாக எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுக்கு திப்பு சுல்தான் இரையானார்.
வங்கத்துச் சிங்கங்கள்
வங்காளத்தில் 1776ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக முஸ்லிம் பக்கிரிகள் நடத்திய புரட்சியால் பிரிட்டிஷ் ஆட்சி கதிகலங்கி விட்டது. இந்தப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய சிராக் அலியைப் பிடிக்க ஆங்கிலேயர்கள் எவ்வளவோ முயற்சித்தனர். தலைமறைவான அவரைக் கடைசி வரை ஆங்கிலேயர்களால் பிடிக்க முடியவில்லை.

தென்னாட்டு வேங்கைகள்
தென்னகத்தின் பல பகுதிகளிலிருந்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் புரட்சியாளர்கள் கிளர்ச்சி செய்தனர். 1800ஆம் ஆண்டு இக்கிளர்ச்சிக்கு கோவையில் தலைமை தாங்கி நடத்தியவர் முஹம்மது ஹசன். ஓசூரில் தலைமை வகித்து நடத்தியவர் ஃபத்தேஹ் முஹம்மது.
ஆங்கிலேயப் படை முஹம்மது ஹசனைக் கைது செய்தது. கிளர்ச்சி பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள ஆங்கிலேயர் அவரை சித்ரவதை செய்தனர். புரட்சியாளர்களின் திட்டங்கள் ஆங்கிலேயருக்குத் தெரிந்து விடக் கூடாது என்று கருதிய முஹம்மது ஹசன் தன் குரல்வளையை அறுத்துக் கொண்டு இந்திய விடுதலைக்காகத் தன் இன்னுயிரை அர்ப்பணித்துக் கொண்டார்.
இஸ்லாம் எந்த நிலையிலும் தற்கொலை செய்வதை அனுமதிக்கவில்லை. முற்றிப் போன தேசபக்தியால் இப்படி தற்கொலை செய்தவர்களும் இருந்தனர் என்பதற்காகவே இதைக் குறிப்பிடுகிறோம்.
குடகுப் பகுதியில் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்து நடத்திய மக்கான் கான், மகபூப்தீன் ஆகியோரை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். மங்களூருக்கு அருகில் உள்ள எட்காலி குன்றில் இவர்கள் இருவரும் 1800ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதியன்று தூக்கிலிடப்பட்டனர்.
முஃப்தீ இனாயத் அஹ்மது
தேடி வந்த முன்சீப் பதவியை உதறித் தள்ளி விட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர் முஃப்தீ இனாயத் அஹ்மது. உ.பி.யில் 1822ஆம் ஆண்டு பிறந்த இவர் நிகழ்த்திய தீப்பொறி பறக்கும் சொற்பொழிவுகள் மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டின.
இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசு இவரைக் கைது செய்தது. இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. 'நீங்கள் புரட்சி செய்தது உண்மையா?' என்று நீதிபதி இவரிடம் கேட்டார்.
'ஆம். அடிமை விலங்கை உடைத்தெறியப் புரட்சி செய்வது என்னுடைய கடமை என்று உணர்ந்து கொண்டேன். புரட்சி செய்தேன்' என்று முஃப்தி இனாயத் அஹ்மது துணிச்சலுடன் பதிலளித்தார். இவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
அன்றும் அயோத்தியின் அவலம்
தேச விடுதலைக்காக நாடு முழுவதும் துறவிக் கோலத்தில் சுற்றுப்பயணம் செய்து புரட்சிப் பிரச்சாரம் செய்தவர் மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி. சென்னை நவாபின் வழிவந்தவரான இவர் கிழக்கு அயோத்தி எனப்படும் பைசாபாத்தின் அதிபராக இருந்தவர். இவரது புரட்சிப் பிரச்சாரம் ஆங்கிலேயருக்கு ஆத்திரமூட்டியது. இவரைக் கைது செய்து பைசாபாத் சிறையில் அடைத்தனர். புரட்சியாளார்கள் சிறைக் கதவை உடைத்து இவரை மீட்டு வந்தனர். இவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ ஒப்படைப்பவருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது.
தலைமறைவாக இருந்த மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி அயோத்தி மன்னன் விரித்த வஞ்சக வலையில் சிக்கினார். அவரைக் காண யானைப் பாகனாக மாறுவேடத்தில் சென்ற போது, அயோத்தி மன்னனின் தம்பி பாவென் என்பவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். 1858ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் தேதியன்று அவரது தலையை அயோத்தி மன்னன் வெட்டி ஆங்கிலேயரிடம் கொண்டு போய்க் கொடுத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசைப் பெற்றான்.

No comments:

Post a Comment