News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Wednesday, December 3, 2014

இந்திய சுதந்திரப் போரில் இஸ்லாமியர்கள் பங்கு - பகுதி 2

அலைகடல் அரிமா குஞ்சாலி மரைக்காயர்  
இந்திய விடுதலைப் போரின் முன்னோடிகளாகத் திகழ்பவர் ஒரு முஸ்லிம் தான் என்பதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது. கடற்போர் பல செய்த தமிழ் மன்னர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் புகழ்ந்து உரைக்கின்றன. அம்மன்னர்களைப் போன்று கடற்போர் பல செய்தவர் குஞ்சாலி மரைக்காயர். ஆங்கிலேயர் நம் நாட்டை அடிமைப்படுத்துவதற்கு முன் இங்கு வந்து கால்பதித்த போர்ச்சுகீசியரை விரட்டியடிக்க கடற்போர்கள் செய்த குஞ்சாலி மரைக்காயர் தான் இந்திய விடுதலைப் போரின் முன்னோடி. கடற்போரில் சாகசங்கள் புரிந்த இந்த வீரத் தளபதியை வெற்றி கொள்ள முடியாத எதிரிகள் நயவஞ்சகமாகக் கொன்றனர்.
வரி தர மறுத்த வரிப்புலிகள்
இந்தியா 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. ஆனால், அதற்கு முன்னரே சுதந்திரம் பெற்று விட்டோம் என்று மிகுந்த நம்பிக்கையுடனும், உறுதியுடனும் 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்' என்று பாடினார் பாரதியார். அந்த அளவுக்கு அவரது மனதில் நம்பிக்கை விதையை விதைத்தது ஹாஜி ஷரியத்துல்லா 1781ஆம் ஆண்டு தொடங்கிய பெராஸி இயக்கமும் அதன் பின் தோற்றுவிக்கப்பட்ட வஹாபி இயக்கமும் ஆகும் என்று கூறலாம்.

வஹாபி இயக்கம் என்று வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படும் இயக்கத்தைத் தோற்றுவித்தவர் சையது அஹமது என்பவர் ஆவார். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் பல போராட்டங்களை அந்த வஹாபி இயக்கம் நடத்தியது. வங்கத்தில் வரி கொடா இயக்கம் நடத்தி நாடியா மாவட்டத்தில் 24 பர்கனாக்களைப் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து, இந்திய மக்கள் சுதந்திரச் சுவாசிக்க வழிவகுத்தது. சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று தீர்க்க தரிதனத்துடன் பாரதி பாடியதற்கு இந்த வரலாற்றுப் பிண்ணனி தான் காரணம் என்று யூகிக்க முடிகிறது.
கதி கலக்கிய கான் சாஹிபு
ஒரு காலத்தில் ஆங்கிலேயருக்கு வேண்டியவராக இருந்து, பிறகு அவர்களுக்கு எதிராக மாறியவர் கான்சாஹிப். இவர் யூசுப்கான், நெல்லூர் சுபேதார், முஹம்மது யூசுப், கும்மந்தான், கம்மந்தான் சாகிபு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டார். யூசுப் கான் சாஹிபு மதுரையில் ஆங்கிலேயரின் கொடியைப் பீரங்கி வாயில் வைத்துச் சுட்டுப் பொசுக்கி விட்டு சுதந்திரப் பிரகடனம் செய்தவர். இவர் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது சொந்த நாட்டுத் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார். ஆங்கிலேயர் அவரைத் தூக்கிலிட்டுக் கொன்றனர்.
ஷா அப்துல் அஜீஸ்
இந்தியாவைச் சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்த இஸ்லாமிய விடுதலை வீரர்களில் ஷா அப்துல் அஸீஸ் அல் தெஹ்லவியும் ஒருவர். பிரிட்டிஷ் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இன்னல்கள் இழைத்து வருவதைக் கண்டு வேதனைப்பட்ட அவர் இந்தியாவை 'தாருல் ஹர்ப்' ஆகப் பிரகடனம் செய்தார்.
ஷா வலியுல்லாஹ்வின் மூத்த மகனாக 1746ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்த தெஹ்லவி ஆங்கிலேயரை எதிர்க்க முஸ்லிம்களுக்கு இராணுவப் பயிற்சியளிக்கத் திட்டமிட்டிருந்தார். அத்திட்டம் நிறைவேறுவதற்கு முன்னரே காலமாகிவிட்டார். இவர் கூறியுள்ள மார்க்கத் தீர்ப்புகள் 'பத்வா' எனும் பெயருடன் இரண்டு பகுதிகளாக வெளிவந்துள்ளன.
அஞ்சாத புலி ஹைதர் அலி
18ஆம் நூற்றாண்டில் சிறந்த தளபதியாகத் திகழ்ந்தவர் ஹைதர் அலி. இவர் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து நடத்திய போர் 'முதலாம் மைசூர் போர்' எனப்படுகிறது. ஹைதர் அலியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஆங்கிலேயர் தோற்று ஓடினர். ஆனால், இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயர் சூழ்ச்சி செய்து இவரைத் தோற்கடித்தனர்.

No comments:

Post a Comment