மினாவுக்குச் செல்வது
துல்ஹஜ் மாதம் ஏழாம் நாள் லுஹருக்குப் பின் இமாம் குத்பா உரை நிகழ்த்த வேண்டும்.
தர்வியா (எட்டாம் நாள்) நாளுக்கு முதல் நாள் மக்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குத்பா உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் செய்ய வேண்டிய கிரியைகள் பற்றி விளக்கினார்கள்.
துல்ஹஜ் மாதம் எட்டாம் நாள் அன்று மினா எனுமிடத்துக்குச் செல்ல வேண்டும்.
அன்றைய தினம் லுஹர், அஸர், மஃரிப், இஷா பஜ்ரு தொழுகையையும் மினாவிலேயே நிறைவேற்ற வேண்டும்.
நூல்: முஸ்லிம் 2137
தர்வியா நாளில் (எட்டாம் நாளில்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்கே லுஹர் தொழுதார்கள்? என்று அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் மினாவில்என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல் அஸீஸ் பின் ரபீவு
எட்டாம் நாளின் லுஹர் தொழுகையையும், அரஃபா நாளின் (ஒன்பதாம் நாளின்) பஜ்ரு தொழுகையையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மினாவில் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்: அபூதாவூத் 1632, 1634, அஹ்மத் 5856
இங்கே நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும்.
மினாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வைத்தார்கள்.
அறிவிப்பவர்: ஹாரிஸா பின் வஹ்பு (ரலி)
நூல்: புகாரி 1082, 1083, 1655, 1656
அரஃபாவுக்குச் செல்வது
மினாவில் ஒன்பதாம் நாளின் சுபுஹ் தொழுகையை முடித்து விட்டு சூரியன் உதயமாகும் வரை தங்கி விட்டு அரஃபாவுக்குப் புறப்பட வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) சூரியன் உதயமாகும் வரை மினாவில் தங்கியதாக ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம் 2137
மினாவிலிருந்து அரஃபாவுக்குச் செல்லும் வழியில் தல்பியாகூறிக் கொண்டும் தக்பீர்கூறிக் கொண்டும் செல்ல வேண்டும்.
நானும் அனஸ் (ரலி) அவர்களும் மினாவிலிருந்து அரஃபாவுக்குச் சென்று கொண்டிருக்கும் போது தல்பியா பற்றி அவர்களிடம் கேட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் செல்லும் போது நீங்கள் எவ்வாறு செய்து வந்தீர்கள்? எனக் கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் தல்பியா கூற விரும்பியவர் தல்பியா கூறுவார். அது ஆட்சேபிக்கப்படவில்லை. தக்பீர் கூறுபவர் தக்பீர் கூறுவார். அதுவும் ஆட்சேபிக்கப்படவில்லைஎன்று விடையளித்தார்கள்.
அறிவிப்பாளர்: முஹம்மத் பின் அபீபக்ர்
நூல்: புகாரி 970, 1659
அரஃபா நாளில் நோன்பு நோற்பது
அரஃபா நாளில் (ஒன்பதாம் நாளில்) நோன்பு நோற்பது சுன்னத் என்றாலும் ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் அன்றைய தினம் நோன்பு நோற்பது தடுக்கப்பட்டுள்ளது.
பார்க்க: புகாரி 1658, 1663, 1988, 1989, 5604, 5618, 5636
அரஃபாவில் தங்குவதன் அவசியம்
ஹஜ்ஜின் மிக முக்கியமான கிரியை அரஃபாவில் தங்குவது தான். சிறிது நேரமேனும் அரஃபாவில் ஒன்பதாம் நாள் தங்காவிட்டால் ஹஜ் கூடாது.
ஹஜ் என்பதே அரஃபா(வில் தங்குவது) தான். பத்தாம் இரவில் பஜ்ருக்கு முன் ஒருவர் (அரஃபாவுக்கு) வந்து விட்டால் அவர் ஹஜ்ஜை அடைந்து கொள்வார்என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துர்ரஹ்மான் பின் யஃமுர் (ரலி)
நூல்கள்: நஸயீ 2966, 2994 திர்மிதீ 814
ஒன்பதாம் நாள் நண்பகலுக்குள் அரஃபாவுக்கு வந்து விடுவது நபிவழி என்றாலும், மறு நாள் பஜ்ருக்கு முன்பாக வந்து விட்டாலும் ஹஜ் கூடி விடும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.
அரஃபாவில் எந்த இடத்திலும் தங்கலாம்
அரஃபா மைதானத்தில் குறிப்பிட்ட இடத்தில் தான் தங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அரஃபா மைதானத்தின் எந்த இடத்திலும் தங்கலாம்.
அரஃபா மைதானம் முழுவதும் தங்குவதற்கு ஏற்ற இடமாகும்என்பது நபி மொழி.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2138
அரஃபாவில் செய்ய வேண்டியவை
நான் அரஃபாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பின்னே (ஒட்டகத்தில்) அமர்ந்திருந்தேன். அவர்கள் தமது கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்தார்கள். ஒட்டகம் அவர்களைக் குலுக்கியது. அதனால் அதன் கடிவாளம் கீழே விழுந்து விட்டது. ஒரு கையை உயர்த்திய நிலையிலேயே இன்னொரு கையால் அதை எடுத்தார்கள்.
அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)
நூல்: நஸயீ 2961
அரஃபாவில் லுஹரையும், அஸரையும் ஜம்வு செய்து இமாம் தொழுவார். அதில் சேர்ந்து தொழ வேண்டும். அதற்கு முன் நிகழ்த்தப்படும் குத்பாவை - உரையை - செவிமடுக்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரஃபா நாளில் குத்பா - உரை - நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) உங்களின் இரத்தங்களும் உங்கள் செல்வங்களும் உங்களுக்குப் புனிதமானவையாகும் என்று தொடங்கும் நீண்ட உரையை நிகழ்த்தினார்கள். பிறகு பாங்கு சொல்லி பின்னர் இகாமத் கூறி லுஹர் தொழுதார்கள். பிறகு மீண்டும் இகாமத் கூறி அஸர் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2137
முஸ்தலிஃபாவுக்குச் செல்வது
அரஃபா மைதானத்தில் சூரியன் மறையும் வரை தங்கி விட்டு சூரியன் மறைந்ததும் மஃரிப் தொழாமல் முஸ்தலிஃபாவுக்குச் செல்ல வேண்டும். முஸ்தலிஃபாவுக்குச் சென்றதும் மஃரிபையும், இஷாவையும் ஜம்வு செய்து தொழ வேண்டும். அங்கே சுப்ஹ் வரை தங்கி விட்டு சுப்ஹ் தொழ வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூரியன் மறையும் வரை அரஃபாவில் தங்கினார்கள். சூரியன் மறைந்ததும் புறப்பட்டு முஸ்தலிஃபாவுக்கு வந்தார்கள். ஒரு பாங்கு, இரண்டு இகாமத்கள் கூறி மஃரிபையும், இஷாவையும் தொழுதார்கள். அவ்விரண்டுக்குமிடையே எதையும் தொழவில்லை. பிறகு பஜ்ரு நேரம் வரை படுத்து (உறங்கி) விட்டு பஜ்ரு நேரம் வந்ததும் ஒரு பாங்கு கூறி பஜ்ரு தொழுதார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2137
மீண்டும் மினாவுக்குச் செல்வது
முஸ்தலிஃபாவில் பஜ்ரைத் தொழுததும் மஷ்அருல் ஹராம்என்ற இடத்தை அடைந்து கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்விடம் தேவைகளைக் கேட்க வேண்டும். மேலும் அந்த இடத்தில் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ வேண்டும். நன்கு வெளிச்சம் வரும் வரை அந்த இடத்திலேயே இருந்து விட்டு சூரியன் உதயமாவதற்கு முன் மினாவை நோக்கிப் புறப்பட வேண்டும்.
(பஜ்ரு தொழுததும்) கஸ்வா எனும் தமது ஒட்டகத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏறி மஷ்அருல் ஹராம் என்ற இடத்துக்கு வந்தார்கள். அங்கே கிப்லாவை முன்னோக்கினார்கள். அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள். (அல்லாஹு அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு என்று கூறி) அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தி லாயிலாஹ இல்லல்லாஹு கூறி அவனது ஏகத்துவத்தை நிலை நாட்டினார்கள். நன்கு வெளிச்சம் வரும் வரை அங்கேயே இருந்தார்கள். சூரியன் உதயமாவதற்கு முன் (மினாவை நோக்கிப்) புறப்பட்டார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2137
பஜ்ரு தொழுத பின்பே முஸ்தலிஃபாவிலிருந்து மினாவுக்குப் புறப்பட வேண்டும் என்றாலும் பலவீனர்கள், பெண்கள் ஆகியோர் இரவிலேயே மினாவுக்குச் சென்று விடலாம்.
ஸவ்தா (ரலி) அவர்கள் பருமனாகவும் விரைந்து நடக்க முடியாதவர்களாகவும் இருந்தனர். அதனால் இரவிலேயே முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1681, 1680
தன் குடும்பத்தின் பலவீனர்களுக்கு முஸ்தலிஃபாவிலிருந்து இரவே புறப்பட அனுமதி வழங்கப்பட்டது. அவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1678, 1677, 1856
மினாவில் செய்ய வேண்டியவை
இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனது கட்டளைப் படி தமது மகனைப் பலியிட முன் வந்த போது ஷைத்தான் அவர்களுக்குக் காட்சி தந்தான். ஜம்ரதுல் அகபாஎன்ற இடத்தில் அவன் மீது ஏழு தடவை சிறு கற்களால் எறிந்தார்கள்.
அதன் பிறகு ஜம்ரதுல் உஸ்தாஎனும் இடத்தில் மீண்டும் காட்சி தந்தான். அங்கேயும் ஏழு தடவை கற்களால் எறிந்தார்கள்.
அதன் பிறகு ஜம்ரதுல் ஊலாஎனுமிடத்தில் காட்சி தந்தான். அங்கேயும் ஏழு தடவை சிறு கற்களால் எறிந்தார்கள்.
அதன் பிறகு ஜம்ரதுல் ஊலாஎனுமிடத்தில் காட்சி தந்தான். அங்கேயும் ஏழு தடவை சிறு கற்களால் எறிந்தார்கள்.
பைஹகீ, ஹாகிம், இப்னு குஸைமா ஆகிய நூல்களில் இந்த விபரம் இடம் பெற்றுள்ளது.
அதை நினைவு கூரும் விதமாகவும், இறைவனது கட்டளை நமது சிற்றறிவுக்குப் புரியாவிட்டாலும் அதை அப்படியே ஏற்போம் என்பதை வெளிப்படுத்தும் விதமாகவும், ஷைத்தான்களின் தூண்டுதலுக்குப் பலியாக மாட்டோம் என்பதைப் பிரகடனப்படுத்தும் வகையிலும் அந்த இடங்களில் கல்லெறிய வேண்டும். இந்த மூன்று இடங்களும் மினாவில் அமைந்துள்ளன.
- பகுதி வாரியாக பார்க்க......
No comments:
Post a Comment