ஸஃபா, மர்வா எனும் குன்றுகளுக்கிடையே ஓடுவது
தவாஃபுல் குதூம்எனும் இந்த தவாஃபை நிறைவேற்றி, இரண்டு ரத்அத்கள் தொழுது விட்டு ஸஃபா, மர்வா எனும் மலைகளுக்கிடையே ஓட வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தவாஃபை முடித்து இரண்டு ரக்அத்கள் தொழுத பிறகு ஸஃபாமர்வாவுக்கு இடையே ஓடினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1616, 1624, 1646, 1647, 1767, 1794, 4188
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃபாவை அடைந்ததும் ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களாகும்என்ற (2:158) வசனத்தை ஓதினார்கள். அல்லாஹ் எதை முதலில் கூறியுள்ளானோ அங்கிருந்தே ஆரம்பிப்பீராகஎன்று கூறிவிட்டு ஸஃபாவிலிருந்து அவர்கள் ஆரம்பித்தார்கள். அதன் மேல் ஏறி கஃபாவைப் பார்த்தார்கள். கிப்லாவை முன்னோக்கி லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர். லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா, அன்ஜஸ வஃதா, வநஸர அப்தா, வஹஸமல் அஹ்ஸாப வஹ்தாஎன்று கூறி
இறைவனைப் பெருமைப்படுத்தினார்கள். இது போல் மூன்று தடவை கூறினார்கள். அவற்றுக்கிடையே துஆ செய்தார்கள். பின்னர் மர்வாவை நோக்கி இறங்கினார்கள். அவர்களின் பாதங்கள் நேரானதும் (சம தரைக்கு வந்ததும்) பதனுல் வாதீஎன்ற இடத்தில் ஓடினார்கள். (அங்கிருந்து) மர்வாவுக்கு வரும் வரை நடந்தார்கள். ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்கள்: முஸ்லிம் 2137
ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்துள்ளதால் அங்கேயும் மேற்கண்ட திக்ருகள் மற்றும் துஆக்களைச் செய்ய வேண்டும்.
ஏழு தடவை ஸஃயு செய்ய வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு ஏதுமில்லை. ஸஃபாவிலிருந்து மர்வாவுக்குச் செல்வது ஒரு தடவையாகக் கருதப்படுமா அல்லது மீண்டும் ஸஃபாவுக்குத் திரும்புவது தான் ஒரு தடவையாகக் கருதப்படுமா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.
ஹதீஸ்களை ஆராயும் போது ஸஃபாவிலிருந்து மர்வாவுக்கு வருவது ஒன்று, மர்வாவிலிருந்து ஸஃபாவுக்கு வருவது மற்றொன்று என்பதே சரியாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏழு தடவை ஸஃயு செய்தார்கள். ஸஃபாவில் துவக்கி மர்வாவில் முடித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2137
துவங்கிய இடத்துக்கே திரும்பி வருவது தான் ஒரு தடவை என்றிருந்தால் கடைசிச் சுற்று ஸஃபாவில் தான் முடிவுறும்; மர்வாவில் முடிவுறாது.
மர்வாவில் முடிந்ததிலிருந்து ஸஃபாவிலிருந்து மர்வா வந்தால் ஒருதடவை என்றும், மர்வாவிலிருந்து ஸஃபாவுக்கு வந்தால் இரண்டு தடவைஎன்றும் விளங்கலாம்.
- பகுதி வாரியாக பார்க்க......
நபிவழியில் நம் ஹஜ் (பகுதி 8) - ஸஃபா, மர்வா(இந்த பகுதி )
No comments:
Post a Comment