ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வரக்கூடியவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடங்களை இஹ்ராம் கட்டுவதற்காக நிர்ணயம் செய்துள்ளனர். அந்த இடங்களை அடைந்ததும் இஹ்ராம் கட்ட வேண்டும்.
மதீனா வாசிகளுக்கு துல்ஹுலைஃபாஎன்ற இடத்தையும், ஷாம் (சிரியா) வாசிகளுக்கு ஜுஹ்ஃபாஎன்ற இடத்தையும், நஜ்துவாசிகளுக்கு கர்னுல் மனாஸில்என்ற இடத்தையும், யமன்வாசிகளுக்கு யலம்லம்(இப்போதைய ஸஃதியா) என்ற இடத்தையும் இஹ்ராம் கட்டும் இடங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள். இந்த எல்லைகள் இந்த இடங்களில் உள்ளவர்களுக்கும், இந்த இடங்களில் வசிக்காமல் இந்த இடங்கள் வழியாக ஹஜ், உம்ராவை நாடி வரக்கூடியவர்களுக்கும் இஹ்ராம் கட்டும் இடங்களாகும். இந்த எல்லைகளுக்கு உட்பட்டு வசிப்பவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடமே எல்லையாகும். மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்ட வேண்டும்எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1524, 1526, 1529, 1530, 1845.
இந்தியாவிலிருந்து செல்பவர்கள் யலம்லம்வழியாகச் செல்வதால் அங்கே இஹ்ராம் கட்ட வேண்டும். ஆடை அணிவதற்குப் பெயர் இஹ்ராம் அல்ல என்பதை நாம் குறிப்பிட்டுள்ளோம். விமானம், கப்பல், போன்றவற்றில் புறப்படுபவர்கள் முன்பே ஆடையை அணிந்து விட்டாலும், அந்த இடத்தை அடையும் போது தல்பியா கூறி இஹ்ராம் கட்ட வேண்டும்.
துல்ஹுலைஃபாஎன்ற இடம் மக்காவுக்குத் தெற்கே 450 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
ஜுஹ்ஃபாஎன்ற இடம் மக்காவுக்கு வடக்கில் 187 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
கர்ன் அல்மனாஸில்என்பது மக்காவுக்குக் கிழக்கில் உள்ள ஒரு மலையின் பெயராகும். மக்காவிலிருந்து 94 கிலோ மீட்டர் தொலைவில் அது அமைந்துள்ளது.
யலம்லம்என்பது மக்காவுக்கு வடக்கே உள்ள ஒரு மலையாகும். இது மக்காவிலிருந்து 54 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இஹ்ராம் கட்ட வேண்டிய காலம்
துல்ஹஜ் மாதம் எட்டாம் நாளிலிருந்து தான் ஹஜ்ஜின் கிரியைகள் துவங்குகின்றன என்றாலும், அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டலாம். ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும்.
(அல்குர்ஆன் 2:197)
ஹஜ் ஒரு மாதம் என்று இறைவன் கூறாமல் சில மாதங்கள் என்று பன்மையாகக் கூறுகிறான்.
ஹஜ்ஜின் மாதங்கள் என்பது ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ்ஜின் பத்து நாட்கள் என்று இப்னு உமர் (ரலி) கூறியுள்ளனர். (புகாரி)
எனவே ஷவ்வால் மாதத்திலோ, துல்கஃதா மாதத்திலோ இஹ்ராம் கட்டலாம். ஷவ்வால் மாதமே இஹ்ராம் கட்டிவிட்டாலும் ஹஜ்ஜின் கிரியைகள் துல்ஹஜ் பிறை எட்டாம் நாளிலிருந்து தான் துவங்குவதால், அது வரை தவாஃப் செய்து கொண்டும் தொழுது கொண்டும் மக்காவிலேயே தங்கிட வேண்டும்.
தவாஃப் அல்குதூம்
அவரவருக்குரிய எல்லைகளில் இஹ்ராம் கட்டி, மக்காவுக்குள் பிரவேசிக்க வேண்டும். மக்காவில் பிரவேசித்தவுடன் தவாஃப்செய்ய வேண்டும். இந்த தவாஃப் தவாஃபுல் குதூம்என்று கூறப்படுகிறது.
குதூம்என்றால் வருகை தருவது என்று பொருள். மக்காவுக்கு வருகை தந்தவுடன் செய்யப்படுவதால் இதற்கு தவாஃப் அல்குதூம்என்று கூறப்படுகிறது.
இந்த நாளில் தான் தவாஃப் அல்குதூம்செய்ய வேண்டும் என்று வரையறை ஏதும் கிடையாது. ஒருவர் இஹ்ராம் கட்டி எப்போது மக்காவில் பிரவேசிக்கிறாரோ அப்போது இதைச் செய்ய வேண்டும்.
ஹஜ்ஜுக்குரிய மாதங்களான ஷவ்வாலில் அல்லது துல்கஃதாவில் இஹ்ராம் கட்டி மக்காவுக்குள் அவர் பிரவேசித்தால் அப்போதே இந்த தவாஃபைச் செய்து விட வேண்டும்.
மக்கா நகரின் புனிதம்
மக்கா நகரை இறைவன் புனித பூமியாக ஆக்கியிருக்கிறான். அதன் புனிதம் கெடாத வகையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்தப் புனிதத் தன்மை மக்கா நகருக்கு மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள ஹரம் எல்லை முழுவதற்கும் பொதுவானதாகும்.
ஹரம் எல்லையை அடையாளம் காட்டுவதற்காக ஐந்து இடங்களில் ஒரு மீட்டர் உயரத்தில் தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த ஐந்து எல்லைகளுக்கும் உட்பட்ட இடங்கள் புனிதமான இடங்களாகும்.
மக்காவுக்குத் தெற்கே ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தன்யீம்என்ற இடம்
வடக்கே பனிரெண்டு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அளாஹ்என்ற இடம்
கிழக்கே பதினாறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஜியிர்ரானாஎன்ற இடம்
வடமேற்கே பதினான்கு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வாதீ நக்லாஎன்ற இடம்
மேற்கே பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹுதைபியாஎனும் இடம்
ஆகியவையே அந்த ஐந்து எல்லைகளாகும். இந்த ஐந்து எல்லைகளுக்கு உட்பட்ட இடங்கள் ஹரம் எனும் புனிதமான இடங்களாகும்.
இந்த இடங்களின் புனிதத்தை எவ்வாறு மதிப்பது?
அல்லாஹ் மக்கா நகரைப் புனித பூமியாக்கியிருக்கிறான். மனிதர்கள் அதைப் புனிதமானதாக ஆக்கவில்லை. அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பக்கூடிய எவருக்கும் அங்கே இரத்தத்தை ஓட்டுவதும், அங்குள்ள மரங்களை வெட்டுவதும் ஹலால் இல்லைஎன்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 104, 1832, 4295.
மக்காவுக்குச் செல்லும் ஒழுங்குகள்
மக்காவுக்குள் நுழைவதற்கு முன் குளிப்பது நபி வழியாகும். ஹரம் எல்லையை அடைந்ததும் தல்பியாவை நிறுத்திட வேண்டும்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹரமை அடைந்ததும் தல்பியாவை நிறுத்தினார்கள். தூ துவாஎன்ற இடத்தில் இரவில் தங்கி விட்டு அந்த இடத்திலேயே சுப்ஹு தொழுது, பிறகு குளித்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: நாபிவு
நூல்: புகாரி 1573
- பகுதி வாரியாக பார்க்க......
No comments:
Post a Comment