News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Tuesday, September 2, 2014

நபிவழியில் நம் ஹஜ் (பகுதி 4) - இஹ்ராம், தல்பியா

இஹ்ராம் கட்டுவது 


ஒருவர் தொழ நாடினால் அவர் அல்லாஹு அக்பர்என்று தக்பீர் கூற வேண்டும். இதனைத் தொடர்ந்து தனது கைகளை நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும். ஆரம்பமாகக் கூறுகின்ற இந்த தக்பீர், தஹ்ரீமாஎன்று குறிப்பிடப்படுகின்றது. 
தஹ்ரீமாஎன்றால் தடுத்தல், விலக்குதல் என்பது பொருளாகும். அதாவது தொழுகையைத் துவக்குவதற்கு முன்னால் அனுமதிக்கப்பட்டிருந்த உண்ணுதல், பருகுதல், பேசுதல் போன்ற காரியங்கள் இந்த தக்பீர் மூலம் தடுக்கப்படுவதால் அது தஹ்ரீமாஎனப்படுகின்றது. 
அல்லாஹு அக்பர்என்று கூறுவதற்குத் தான் தக்பீர் என்று பெயர். ஆனாலும் நெஞ்சில் கை கட்டுவதையே தக்பீர் என மக்கள் விளங்கியுள்ளனர். நெஞ்சில் கை கட்டுவது தொழுகையின் ஒரு அங்கம் என்றாலும் அந்தச் செயலை தக்பீர் எனக் கூறக் கூடாது. அல்லாஹு அக்பர்என்று சொல்வதே தக்பீராகும். 
இதைத் தவறாக மக்கள் விளங்கியுள்ளது போலவே இஹ்ராமையும் தவறாக விளங்கியுள்ளனர். இஹ்ராம்என்பது குறிப்பிட்ட சில வார்த்தைகளைக் கூறுவதாகும். அப்போது குறிப்பிட்ட வகையில் உடையணிந்திருக்க வேண்டும். ஆனாலும் மக்கள் குறிப்பிட்ட விதத்தில் அணியும் ஆடையையே இஹ்ராம் என்று விளங்கியுள்ளனர். 
ஒருவர் ஒரு இஹ்ராமில் ஹஜ்ஜையும் உம்ராவையும் செய்ய நாடினால் லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்(ஹஜ்ஜையும் உம்ராவையும் நாடி இறைவா உன்னிடம் வந்து விட்டேன்) என்று கூற வேண்டும். 
ஹஜ்ஜை மட்டும் செய்ய நாடினால் லப்பைக்க ஹஜ்ஜன்என்று கூற வேண்டும். 
உம்ராவை மட்டும் செய்ய நாடினால் லப்பைக்க உம்ரதன்என்று கூற வேண்டும். 
இவ்வாறு கூறுவதே இஹ்ராம் ஆகும். இதைத் தொடர்ந்து தல்பியா எனும் முழக்கத்தைச் சொல்ல வேண்டும். 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்என்று கூறி ஹஜ், உம்ராவுக்காக தல்பியா கூறியதை நான் செவியுற்றுள்ளேன். 
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) 
நூல்: முஸ்லிம் 2194, 2195 

தல்பியா கூறுதல் 

தல்பியாவின் வாசகம் வருமாறு: 
அரபி1

லப்பைக், அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல்முல்க, லாஷரீக லகஎன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) 
நூல்: புகாரி 1549, 5915 
அரபி2

லப்பைக், அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லகஎன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) 
நூல்: புகாரி 1550 

தல்பியாவை உரத்துக் கூறுதல் 

திக்ருகள், துஆக்கள் ஆகியவற்றை உரத்த குரலில் கூறுவது திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும், தல்பியாவை மட்டும் உரத்த குரலில் சொல்லுமாறு ஹதீஸ்கள் வலியுறுத்துகின்றன. 
என்னிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து இஹ்ராமின் போதும், தல்பியாவின் போதும் என் தோழர்கள் சப்தத்தை உயர்த்த வேண்டும்என்று கட்டளையிட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: ஸாயிப் பின் கல்லாத் (ரலி) 
நூல்கள்: ஹாகிம், பைஹகீ 

தல்பியாவை நிறுத்த வேண்டிய நேரம் 

இஹ்ராம் கட்டியவர்கள் அதிகமதிகம் தல்பியாவைக் கூற வேண்டும். ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறியும் வரை தல்பியாவைக் கூறிக் கொண்டே இருக்க வேண்டும். ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறிந்து முடித்தவுடன் தல்பியாவை நிறுத்திக் கொள்ள வேண்டும். 
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒட்டகத்தில் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து அரஃபாவிலிருந்து மினா வரை சென்றேன். ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும் வரை அவர்கள் தல்பியா கூறிக் கொண்டே இருந்தார்கள். 
அறிவிப்பவர்: ஃபழ்லு பின் அப்பாஸ் (ரலி) 
நூல்: புகாரி 1544, 1683, 1687. 
எந்தெந்த இடங்களில் குறிப்பிட்ட துஆக்கள் ஓத வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளதோ அந்த நேரங்கள் தவிர எல்லா நேரமும் தல்பியாவை அதிகமதிகம் கூற வேண்டும். 

இஹ்ராமின் போது தவிர்க்க வேண்டிய ஆடைகள் 

இஹ்ராம் கட்டியவர் ஹஜ்ஜை நிறைவேற்றி முடிக்கும் வரை சில ஆடைகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். 
இஹ்ராம் கட்டியவர் எதை அணியலாம்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியவர் சட்டையையோ, தலைப்பாகையையோ, தொப்பியையோ, கால்சட்டையையோ அணிய வேண்டாம். குங்குமச்சாயம், வர்ஸ் (எனும் மஞ்சள்) சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளையும் அணிய வேண்டாம். செருப்பு கிடைக்காவிட்டால் தவிர காலுறைகளையும் அணிய வேண்டாம். அவ்வாறு காலுறைகளை அணியும் போது கரண்டைக்குக் கீழே இருக்குமாறு மேற்பகுதியை வெட்டி விடுங்கள்என்று விடையளித்தார்கள். 
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) 
நூல்: புகாரி 134, 366, 1542, 1842, 5794, 5803, 5805, 5806, 5852. 
இஹ்ராம் கட்டிய பெண் தனது முகத்தை மறைக்க வேண்டாம். கையுறைகளையும் அவள் பயன்படுத்த வேண்டாம்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) 
நூல்: புகாரி 1838 
தைக்கப்படாத ஆடைகள் கிடைக்கும் போது தான் இவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். தைக்கப்படாத ஆடைகள் கிடைக்காத பட்சத்தில் தைக்கப்பட்டதையும் அணிந்து கொள்ளலாம். 
யாருக்குச் செருப்பு கிடைக்கவில்லையோ, அவர் காலுறைகளை அணிந்து கொள்ளட்டும். யாருக்கு வேட்டி கிடைக்கவில்லையோ, அவர் கால் சட்டைகளை அணிந்து கொள்ளட்டும்என்பது நபிமொழி. 
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) 
நூல்: புகாரி 1841, 1843, 5804, 5853. 

இஹ்ராமின் போது கடைப்பிடிக்க வேண்டியவை 

இஹ்ராம் கட்டும் போது குளித்து விட்டு நறுமணம் பூசிக் கொள்ள வேண்டும். 
இஹ்ராம் கட்டிய பிறகு நறுமணப் பொருட்களைப் பயன்படுத்தத் தடை இருந்தாலும் இஹ்ராமுக்கு முன் நறுமணம் பூசி, அந்த நறுமணம் இஹ்ராமுக்குப் பின்பும் நீடிப்பதில் தவறு ஏதுமில்லை. 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டும் போது என்னிடம் உள்ள நறுமணத்தில் மிகச் சிறந்ததைப் பூசி விட்டேன். 
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) 

நூல்: புகாரி 5928, 267, 5923.


  • பகுதி வாரியாக பார்க்க......



No comments:

Post a Comment