News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Wednesday, September 17, 2014

நபிவழியில் நம் ஹஜ் (பகுதி 11) - தலை மழித்தல்

தலை மழித்தல்
பத்தாம் நாள் அன்று ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்ததும் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் எதையேனும் குர்பானி கொடுக்க வேண்டும். அதன் பிறகு தலை முடியை மழித்துக் கொள்ள வேண்டும். அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும்.
ஒருவர் இவ்வாறு செய்ததும் இஹ்ராமிலிருந்து ஓரளவு விடுபடுகிறார். இஹ்ராம் கட்டியதால் அவருக்கு விலக்கப்பட்டிருந்த நறுமணம், தைக்கப்பட்ட ஆடைகள் போன்றவற்றை அவர் பயன்படுத்திக் கொள்ளலாம். மனைவியுடன் உடலுறவு கொள்வதைத் தவிர மற்ற அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள இப்போது முதல் அவர் அனுமதிக்கப்படுவார்.
தலை மயிரைச் சிறிதளவு குறைத்துக் கொள்ளவும், முழுமையாக மழித்துக் கொள்ளவும் அனுமதி உண்டு; என்றாலும் முழுமையாக மழித்துக் கொள்வதே சிறந்ததாகும். பெண்கள் சிறிதளவு முடியைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

இறைவா! மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாகஎன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள் முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்(மன்னிப்பாயாக என்று கூறுமாறு) கேட்டுக் கொண்டார்கள். இறைவா! மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாகஎன்றே (மீண்டும்) கூறினார்கள். (மீண்டும்) நபித்தோழர்கள் முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்என்று கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறைத்துக் கொள்பவர்களையும் (மன்னிப்பாயாக)என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1727
பெண்கள் தலை மழித்தல்
தலையை மழித்துக் கொள்வது பெண்களுக்குக் கிடையாது. (சிறிதளவு மயிரைக்) குறைத்துக் கொள்வதே அவர்களுக்கு உண்டுஎன்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் 1694
கல்லெறிந்த பின்
நீங்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்து விட்டால் பெண்களைத் தவிர மற்ற அனைத்தும் உங்களுக்கு ஹலாலாகும்என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் 1708
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு, அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு முன்பும், பத்தாம் நாளில் கஃபாவை தவாஃப் செய்வதற்கு முன்பும் கஸ்தூரி கலந்த நறுமணத்தைப் பூசி விட்டேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரி 1754, 5922 முஸ்லிம் 2040
(பத்தாம் நாளில் குர்பானி கொடுப்பது சம்பந்தமான விவரங்களைத் தனியாக பிறகு விளக்குவோம்.)
பத்தாம் நாள் கிரியைகளை மேலே நாம் கூறிய வரிசைப்படி செய்வது நபிவழி என்றாலும் அந்த வரிசைக்கு மாற்றம் செய்வதில் தவறேதும் இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் நிற்கும் போது ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் கல்லெறிவதற்கு முன்பே (தலையை) மழித்து விட்டேன்என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இப்போது கல்லெறிவீராக! அதில் தவறேதும் இல்லைஎன்றார்கள். இன்னொருவர் வந்து நான் கல்லெறிவதற்கு முன்பே கஃபாவைத் தவாஃப் செய்து விட்டேன்என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இப்போது கல்லெறிவீராக! அதில் தவறேதும் இல்லைஎன்றார்கள். முன் பின்னாகச் செய்யப்பட்ட எதைக் குறித்து கேட்கப்பட்ட போதும் செய்து கொள்! தவறேதும் இல்லைஎன்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)
நூல்: புகாரி 124, 1738, 83, 1736, 6665
மினாவில் பத்தாம் நாள் செய்ய வேண்டிய காரியங்களை முன் பின்னாகச் செய்வதில் தவறேதும் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.
தவாஃப் அல் இஃபாளா
பத்தாம் நாள் அன்று மினாவில் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்து விட்டு குர்பானியும் கொடுத்து, தலையை மழித்த பின் மக்காவுக்குப் புறப்பட்டு மீண்டும் தவாஃப் அல் இஃபாளா எனும் தவாஃப் செய்ய வேண்டும்.
இது தவாஃப் ஸியாராஎனவும் கூறப்படுகிறது.
இந்தத் தவாஃபைச் செய்து விட்டு மீண்டும் மினாவுக்குத் திரும்ப வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று தவாஃப் அல் இஃபாளாசெய்து விட்டு, திரும்பி வந்து மினாவில் லுஹர் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2307
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறுக்குமிடம் சென்று அறுத்துவிட்டு, வாகனத்தில் ஏறி தவாஃபுல் இஃபாளா செய்துவிட்டு மக்காவில் லுஹர் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2137
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று மினாவில் லுஹர் தொழுததாகவும், மக்காவில் லுஹர் தொழுததாகவும் இரண்டு அறிவிப்புகள் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு தடவை தான் ஹஜ் செய்துள்ளதால் வெவ்வேறு ஆண்டுகளில் நடந்ததாகக் கருத முடியாது.
தவாஃபுல் இஃபாளாவை முடிக்கும் போது மக்காவிலேயே லுஹர் நேரம் வந்து விட்டதால் அங்கே லுஹர் தொழுது விட்டு மினாவுக்கு வந்து மீண்டும் ஒரு முறை மக்களுக்கு இமாமாக லுஹர் தொழுகை நடத்தியிருக்கக் கூடும் என்று நவவி அவர்கள் கூறுகிறார்கள்.
தவாஃப் அல் இஃபாளா செய்யும் முறை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவாஃப் அல் குதூம்செய்யும் போது மூன்று தடவை ஓடியும், நான்கு தடவை நடந்தும் சுற்றியதாக முன்னர் கண்டோம். ஆனால் இந்தத் தவாஃபின் போது ஏழு சுற்றிலும் நடந்தே தான் செல்ல வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓடியதாக வரும் ஹதீஸ்களில் ஆரம்ப தவாஃபின் போதுஎன்ற வாசகம் காணப்படுகின்றது. இதிலிருந்து இதை நாம் அறியலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவாஃப் அல் இஃபாளா செய்யும் போது ஏழு சுற்றுக்களிலும் அவர்கள் ஓடவில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்: அபூதாவூத் 1710, இப்னுமாஜா 3051
பெயர் குறிப்பிடப்பட்ட தவாஃபாக இருந்தாலும், உபரியாகச் செய்யும் தவாஃபாக இருந்தாலும் ஒவ்வொரு தவாஃபையும் முடித்த பின் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஅபாவை ஏழு சுற்று சுற்றியதும் மகாமே இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: புகாரி: 396, 1600, 1616, 1624, 1646, 1647, 1794)
அது போல் ஸஃபா, மர்வாவுக்கிடையே ஸஃயும் செய்ய வேண்டும்.
இந்தத் தவாஃபை முடித்த பிறகு உடலுறவு உட்பட அனைத்தும் ஹலாலாகின்றது. இப்போது தான் முழுமையாக இஹ்ராமிலிருந்து ஒருவர் விடுபடுகிறார். இஹ்ராம் காரணமாக அவருக்குத் தடுக்கப்பட்ட யாவும் இப்போது முதல் ஹலாலாகின்றது.
கடைசி ஹஜ் வருடத்தின் போது நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். உம்ராவுக்கு இஹ்ராம் கட்டியவர்களும் எங்களில் இருந்தனர். ஹஜ், உம்ரா இரண்டுக்கும் இஹ்ராம் கட்டியவர்களும் எங்களில் இருந்தனர். ஹஜ்ஜுக்கு மட்டும் இஹ்ராம் கட்டியவர்களும் எங்களில் இருந்தனர். உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியவர் தவாஃபுல் குதூம் செய்ததும் இஹ்ராமிலிருந்து விடுபட்டார். ஹஜ்ஜுக்கு மட்டும் இஹ்ராம் கட்டியவரும், ஹஜ்ஜுக்கும், உம்ராவுக்கும் இஹ்ராம் கட்டியவரும் பத்தாம் நாளன்று தான் இஹ்ராமிலிருந்து விடுபட்டனர்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரி 319, 1562, 4408
பத்தாம் நாளன்று தான் இஹ்ராமிலிருந்து விடுபட முடியும் என்பதை இந்த ஹதீஸ் அறிவிக்கின்றது. பத்தாம் நாளில் கல்லெறிந்து, தலையை மழித்து, அறுத்துப் பலியிட்டவுடன் பெண்களிடம் கூடுவது தவிர மற்ற விஷயங்கள் செய்ய அனுமதிக்கப்படுவதை முன்னர் கண்டோம். தவாஃப் அல் இஃபாளா செய்தவுடன் முழுமையாக ஒருவர் இஹ்ராமிலிருந்து விடுபடுகிறார்.
பெருநாள் தொழுகை கிடையாது
பத்தாம் நாள் ஹாஜிகளுக்குப் பெருநாள் தொழுகை கிடையாது. ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று மினாவில் சொற்பொழிவு நிகழ்த்தியதாகப் பல ஹதீஸ்கள் கூறுகின்றன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மினாவில் ஹஜ் பெருநாள் தினத்தில் தமது அள்பாஎனும் ஒட்டகத்தின் மீதமர்ந்து (குத்பா) உரை நிகழ்த்தியதை நான் பார்த்திருக்கிறேன்.
அறிவிப்பவர்: ஹிர்மாஸ் பின் ஸியாத் (ரலி)
நூல்கள்: அஹ்மத் 19218, அபூதாவூத் 1669
பத்தாம் நாளன்று மினாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உரையை நான் செவியுற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)
நூல்: அபூதாவூத் 1670

அனேகமாக மினாவில் அவர்கள் லுஹர் தொழுகை நடத்திய பிறகு இந்த உரையை நிகழ்த்தியிருக்கக் கூடும்.

  • பகுதி வாரியாக பார்க்க......



No comments:

Post a Comment